Saturday, 13 January 2018

பொங்கல் வாழ்த்து!தைமகளே வா வா !
-
தமிழின் பெருமைப் பாடிநின்றோம்!
   தலையை நிமிர்த்தி உயந்திருந்தோம்!
அமிழ்தே என்றே அறிந்திருந்தும்
   அதனை வளர்க்கும் நிலைமறந்தோம்!
உமியை உண்டு மனமகிழ்ந்து
   உரிய அரிசி பயன்மறந்து
தமிழன் என்றே மார்த்தட்டும்
   தாழ்வைக் காண்பாய்த் தைமகளே!

குப்பைத் தொட்டி அரசியலில்
   குவிந்தே இருக்கும் நாற்றங்கள்!
தப்பைக் கூடச் சரியென்றே
   தலையை ஆட்டும் கூட்டங்கள்!
சப்பை மாட்டு முதுகினிலே
   சபையைக் கூட்டும் முண்டங்கள்!
உப்புக் குதவா ஆட்சியதன்
   ஒலியைக் கேட்பாய்த் தைமகளே!

உழவன் என்னும் உயர்வுள்ளம்
   உழைப்பைக் கொடுத்தே உடலிளைத்துக்
கழனி காடு நலஞ்சேர்த்துக்
   களையை எடுத்துப் பயிர்செய்து
சுழலும் வாழ்வில் சுகம்சேர்த்தார்!
   சூழ்ச்சி கொண்ட தரகரினால்
இழந்த வளத்தில் கண்கலங்கும்
   இழிவைப் பார்ப்பாய்த் தைமகளே!

உன்னை வாழ்த்தித் தமிழ்மரபால்
   உயர்த்தி அன்று வரவேற்றேன்!
பொன்னாம் பண்மலர்ச் சூடியநான்
   புகழும் தமிழால் சொல்கின்றேன்!
நன்மை என்று எந்நாட்டில்
   நவில ஒருசொல் இன்றில்லை!
இன்பம் இனிமேல் வருமென்றால்
   இனிதாய் இன்று வந்துவிடு!

துன்பம் கண்ட நிலைபோக்கித்
   துணிவை நீயே தந்துவிடு!
மென்மை நெஞ்சம் வளமேந்தி
   மேலும் சிறக்க வைத்துவிடு!
அன்பில் நாளும் ஆடுகின்ற
   அகத்தை நாளும் கொடுத்துவிடு!
பொன்னாம் தமிழன் தைமகளே
   புதுமைப் பெண்ணாய்ப் பொலிந்துவிடு!
-
அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!
-
அன்புடன்
பாவலர் அருணா செல்வம்

14.01.2018

Friday, 12 January 2018

போகி பொங்கல் வாழ்த்து!
இன்றே கொளுத்து!
-
வம்பை வளர்த்திடும் வன்முறையும், தீதென்ற
தெம்பை இழக்கும் செயல்களையும், குற்றமதைக்
கண்டும் நகர்ந்து கடப்பதையும்... இன்றே...நீ
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
-
அனைவருக்கும் இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
-
பாவலர் அருணா செல்வம்

13.01.2018

Thursday, 11 January 2018

திருமால் மார்கழிப் பாடல்கள்! (1 -15)
(அந்தாதி)
.
மார்கழி மாத மலர்களே வாருங்கள்!
கார்நிறக் கண்ணன் கதைகேட்க! – சீராய்
மணம்பரப்பி முத்தமிழில் மாலையிட்டுப் பாடி
வணங்குவோம் நெஞ்சினில் வைத்து!
.
வையத்தைக் காக்கின்ற வைகுந்தா! சீரேந்த
வையகத்துள் வந்துநீ மாண்பளிப்பாய் ! – ஐயனே !
வாழ்வுறும் துன்பினை மாய்த்துப் பிறப்பென்னும்
ஊழ்போக்கி என்னெஞ்சுள் ஓங்கு!
.
ஓங்கிடும் தீக்குணம் ஒய்யாரம் காட்டிவிடும்!
தூங்கிடும் எண்ணம் துணிவைவிடும்! – தாங்கியே
துன்பத்தைப் போக்கித் துணையிருக்கும் கேசவனை
அன்புடன் போற்றுவோம் ஆழ்ந்து!
.
ஆழ்கடல் கொண்ட அமைதி முகத்தானே!
சூழ்ந்திடும் துன்பம் சுகமழிக்கும்! – வாழ்உலகில்
ஏற்றமுடன் வாழ்வதற்கே ஏழு மலைவாசா
மாற்றமிகும் தீக்குணத்தை மாய்!
.
மாயனே! மாறிடும் மண்ணுலகைக் காத்திடும்
தூயனே என்றும் துணையாக, – நேயமுடன்
சாற்றிடும் பண்ணினும், சாந்தமுடன் உன்புகழைப்
போற்றியே பாடுதே புள்ளு!
.
புள்ளொலி கேட்டுப்பார்! பூவிழி மன்னனின்
உள்ளொலிர் நாமம் உணர்த்திடும்! – உள்ளம்
களித்திடும்! அவ்வொளியால் காது குளிரும்!
கிளிமொழியில் உன்பெயரோ கீசு!
.
கீசுகீ சென்னும் கிளியின் குரலினிமை
வாசுவின் சீரை வழங்கிடுமே! – மாசற்ற
வீழ்அருவி! வாமன விஞ்சையோ! நீரினிலே
கீழ்பார்க்க வானம்நம் கீழ்!
.
கீழிறங்கும் நீரே கிடைத்திட நல்வளம்!
ஆழிதரும் நன்மை அடங்காது! – தோழியே
ஓயாமல் சுற்றும் உலக உயர்வுக்குத்
தூயவனின் நல்லருளே தூண்!
.
தூரிகை கொண்டே தொழுகின்றேன் மாதவனை!
காரிகை கற்றிடும் காரிகைநான்! – பூரித்தேன்!
ஏக்கமுடன் எம்மானை ஏட்டில் எழுதிட
நோக்கமுடன் செய்கிறேன் நோம்பு!
.
நோற்றுத் தருகின்ற நோக்கமெல்லாம் உன்னுடமை!
காற்றுத் தருவதும் உன்கடமை! – ஏற்றமிகு
ஞாலம் நினைத்திருக்கும்! யாதவனே ஊழ்முடிவில்
காலம் உணர்த்திவிடும் கற்று!
.
கற்றே அறிவேனா கார்முகிலா உன்பெருமை?
உற்றே அறிவேனா உன்னருளை! – சிற்றறிவு
கொண்டேநான் தேடுகிறேன் கோபாலா! உன்னுருவோ
கண்ணுள் கமழும் கனை!
.
கனைசங்கு ஊதிக் கருத்துரைத்தாய்! மக்கள்
வினையென்ற வாழ்வை விரித்தாய்! – மனையறம்
இன்பத்தை உன்வாயால் நீகூற நான்படிக்க
பொன்நெஞ்சம் ஆகுதே புள்ளு!
.
புள்ளிவைத்த மார்கழிப் பூக்கோலம் சொல்லிடும்
உள்ளத்துள் நின்றுயர்ந்த உத்தமனை! – கள்ளழகா!
மாங்குயில் இல்லை! மனதாறப் பாடுமென்றன்
ஓங்கும் கருத்தும் உனது!
.
உங்கள் அழகினை ஊர்பேசும்! தோழியரே!
பொங்கும் விழியழகைப் போய்ப்பாரும்! – தங்கமென
அள்ளும் பெருமாள்! அறியாமல் பேசுவோரை
எள்ளி நகைத்திடுவோம் எல்!
.
எல்லையிலா எண்ணம் இறக்கை விரித்திடும்
சொல்லில்லா வார்த்தைகள் சுற்றிவரும்! – வில்லழகா!
உற்றவழி கண்டதனால் ஊர்புகழ உன்னருளை
நற்றமிழில் பாடுமென் நா!
.
(தொடரும்)
.
பாவலர் அருணா செல்வம்

02.01.2018

Sunday, 31 December 2017

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து !


-
புத்தம் புதிய ஆண்டினிலே
    புதுமை பலவும் கண்டோங்கிச்
சித்தம் தெளிந்த நிலையேந்திச்
    சிறந்த வழியில் வாழ்வேந்திக்
கொத்து மலரின் தேனேந்திக்
    குளிர்ந்த நிலவின் அழகேந்தி
நித்தம் மகிழ்வாய் வாழ்ந்திடவே
    நிறைந்த நெஞ்சாய் வாழ்த்துகிறேன்!
-
பாவலர் அருணா செல்வம் 
01.01.2018